மிழகத்தில் 7 கல்வியியல் கல்லூரிகள் உள்பட மொத்தம் 171 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 7,300 கவுரவ விரிவுரையாளர்கள் 20 ஆண்டுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றியபடி, பணி நிரந்தரத்துக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

Advertisment

தமிழ்நாடு அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துநகை கூறுகையில், "தமிழகத்தில், கடந்த 2001-2006ல் பணி நியமனத் தடைச் சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். அந்தக் காலகட்டத்தில்தான் முதன்முதலாக கவுரவ விரிவுரையாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். ஆரம்பத்தில், ஒரு மணி நேரத்திற்கு 125 ரூபாய் என்று கணக்கிட்டு, அதிகபட்சம் மாதம் 4000 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டது.

reas

காலிப்பணியிடங்களை நிரப்பும்போதெல் லாம் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்று போராடி வந்தோம். 2007 முதல் 2011 வரை நான்கு முறை உதவி பேராசிரியர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட்டன. ஏமாற்றமடைந்த நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி னோம். எங்களை அழைத்துப் பேசிய தி.மு.க. அரசு, யு.ஜி.சி. விதிகளின்படி கல்வித் தகுதியுடையவர்களை மட்டும் பணி நிரந்தரம் செய்வதாக உறுதி அளித்தது. ஆட்சி மாற்றமாகி அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு தொகுப்பூதியத்தை 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்கியதோடு, கவுரவ விரிவுரையாளர்களை பணி வரன்முறை செய்வதாகவும் அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது. முதல்கட்டமாக 1,146 கவுரவ விரிவுரையாளர்களை பணி வரன்முறை செய்வதாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் நெருக்கத்தில் அவசர அவசரமாக, 15-2-2021 முதல் கல்லூரிக் கல்வி இயக்ககம் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது. எனினும், சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக 26.2.2021ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.

Advertisment

2021-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எங்களை அழைத்துப் பேசினார். அரசாணை எண் 56-ல் உள்ள குறைகளைச் சரி செய்தபிறகு, எங்களை பணி நிரந்தரம் செய்வதாகத் தெரிவித்தார். இந்நிலையில்தான், பணி அனுபவத்திற்காக வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையையும், அரசாணை 56-ஐ ரத்து செய்து, புதிதாக போட்டித்தேர்வு முறையையும் உயர்கல்வித்துறை அறிமுகப் படுத்தி உத்தரவிட்டது. அரசாணை எண் 56ஐ நீக்கியதால், கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி அனுபவத்திற்காக வழங்கப்பட்டு வந்த 30 மதிப்பெண்களில் இனி 15 மதிப்பெண்கள் மட்டும் வழங்கப்படும் என்றும் உயர் கல்வித்துறை அறிவித்தது. இதற்கிடையே, எங்கள் கோரிக்கைகளை தமிழக உயர் கல்வித்துறை பரிசீலிக்க வேண்டுமென்று கடந்த 24.3.2023ம் தேதி மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்தபோதும், அதனை நடைமுறைப்படுத்த இயலாது என்று தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்ட கவுரவ விரிவுரையாளர்களுக்கு நேர் காணல் நடத்தி, அப்பணிகளை நிறைவு செய்யும்படி கடந்த 2.4.2024ஆம் தேதி தீர்ப்பளித்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்து அதிர்ச்சி யளித்தது. எனவே எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 9ஆம் தேதி, சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கிறோம்'' என்றார்.

ss

தமிழ்நாடு அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர்களான கந்தசாமி, கோமதி ஆகியோர் கூறுகையில், "கவுரவ விரிவுரையாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தை 11 மாதங்களுக்கு மட்டுமே வழங்குகிறார்கள். மே மாதத்தில் ஊதியம் கிடையாது. தகுதிவாய்ந்த கவுரவ விரிவுரையாளர்களுக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டுமென்ற யு.ஜி.சி. உத்தரவையும் தமிழக அரசு செயல்படுத்த மறுக்கிறது. கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பு dfஉள்ளிட்ட அடிப்படைச் சலுகைகளை வழங்க வேண்டும்'' என்றனர்.

Advertisment

தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர்கள் கழக மாநில துணைத்தலைவர் மாது கூறுகையில், "அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர்கள், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்கள், தொகுப்பூதிய கவுரவ விரிவுரையாளர்கள், பி.டி.ஏ. சார்பில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் என நான்கு நிலைகளில் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் எல்லோருமே ஒரே வேலையைச் செய்து வந்தாலும், நிரந்தர ஆசிரியர்களுக்கு 75,000 ரூபாய்க்கு மேலும், தற்காலிக ஆசிரியர்களுக்கு சொற்ப ஊதியமும் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரே கல்லூரி வளாகத்திற்குள் பணியாற்றும் ஆசிரியர்களுக்குள் ஊதியம் மற்றும் இதர சலுகைகளில் பாரபட்சம் நிலவும்போது, தொகுப்பூதிய கவுரவ விரிவுரையாளர்களால் மன நிம்மதியுடன் பணியாற்ற முடியாது. தகுதிவாய்ந்த கவுரவ விரிவுரையாளர்களை தமிழக அரசு உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்'' என கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு முறையும் தேர்தல் நெருக்கத்தில் கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரம் செய்வதாக உறுதியளிப்ப தோடு ஆட்சியாளர்கள் இவர்களை மறந்துவிடுகிறார்கள். தமிழ்ப் புதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கும் தமிழக உயர்கல்வித்துறை, கவுரவ விரிவுரையாளர்களை தத்தளிக்கவிடக்கூடாது.

-இளையராஜா